
சுந்தரானந்தர்
நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகர் என்பார்கள். அதனினும் சிறந்தது மதுரையம்பதி என்றால், துளியும் மிகைகிடையாது. அதிலும் அபிஷேக பாண்டியனின் காலத்தில் மதுரை நகரம் வடிவிலும் சரி, பொலிவிலும் சரி பூரித்துக் கிடந்தது.
சுந்தரானந்தர் சிறப்பு
சிறப்பு பெற்ற மதுரை மாநகரின் வீதிகளில் அறிஞர் சங்கங்கள் நிரம்பியிருந்தன.
குதிரை வீரர்களின் உலாக்களுக்கும், சிவிகைகளின் ஊடு நடைக்கும் நடுவே யாராவது இரண்டுபேர் சந்தித்துக் கொண்டால், அவர்கள் பேசிக்கொள்வது கவிதையாகத்தான் இருக்கும். அதில் குற்றம் காண்பதும் பின் அரண்மனை முற்றம் ஏகுவதும் சாதாரணமாக நடக்கும். தமிழ், திருநடனமாடிய நாட்கள் அவை.
ஆயினும் மனித சக்தியின் புதுப்புது பரிமாணங்கள் பற்றி பெரிய ஞானம் யாருக்கும் இல்லை என்றே கூறவேண்டும்.
சோமசுந்தரர் ஆலயம் ஏகுபவர்கள் கூட, இறைவனை ஒரு நிகரில்லாத சக்தியாகக் கருதி பொன் கேட்டார்கள், பொருள் கேட்டார்கள். ஒருவர்கூட நிகரில்லாத ஞானத்தைக் கேட்கவில்லை… கேட்கத் தெரியவில்லை.
இவர்களுக்கெல்லாம் வழிகாட்டுவதற்கென்றே இறைவனும் சோமசுந்தரனாய் ஒரு கட்டிளம் காளை வடிவில் மதுரையம்பதிக்குள் ஒருநாள் நுழைந்தான்.
அவன் திருக்கோலத்தை மதுரைக் கலம்பகம் தொட்டு பரஞ்சோதியடிகளின் கண் வழிக்காண்போமா?
‘விபூதிப் பந்தலிட்ட நெற்றி, மையத்தில் குங்குமத் திலகம். உச்சியில் வட்டமிட்டு வளைத்துக் கட்டிய சிகை, செவிப்புலத்திலோ கனக குண்டலங்கள், கழுத்தில் ஸ்படிக மாலை, அதன் மையத்தில் ஓர் உருத்திராட்சம். பரந்துவிரிந்த மார்பு, அதில் பளீரென்ற பூணூல்.
சிவபெருமானே நேரில் வந்து விட்டிருக்கிறான் என்பதன் சான்றாய் புலித்தோல் ஆடை, பொற்சிலம்பு, பாதங்களில் நாகமரக்குறடுகள்…. நடந்து வரும் விதத்திலோ சொல்லமுடியாத அளவு நளினசிங்காரம்! மதுரை மாநகரமே அவர் மேல் வைத்த பார்வையை எடுக்க முடியாமல் திணறியது.
தேஜஸ் என்னும் சொல்லுக்கு பொருள் கூறுவது போல உலவிய அச்சுந்தரனைப் பார்த்த பலரில் சிலர், தம்மை மறந்து கைகளைக் கூப்பி வணங்கவும் செய்தனர்.
பதிலுக்கு அவர்களை சுந்தரர் ஆசிர்வதிக்க, கூப்பிய அவர்களின் கரங்களுக்குள்ளே ஒரு பொன் நாணயம்! கையை அவர்கள் விலக்கியபோது அந்த நாணயம் கீழே விழுந்து உருண்டு ஓடியது.