
ராம தேவர்
மெக்கா நகர மக்களே! நான் ஒரு சித்தன். உங்கள் அரபு நாட்டில் காயகல்ப மூலிகைகள் இருப்பதை அறிந்து, அவற்றைப் பற்றி ஆய்வு செய்து, மருந்துகள் தயாரித்து மனித குலத்தின் நோய் தீர்க்கவே இங்கு வந்தேன். என்னைத் தவறாகக் கருதாதீர்கள். எனக்கு மத வேறுபாடெல்லாம் கிடையாது. நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்றார் ராமதேவர்.
யார் இவர்? ராமதேவர் நாகப்பட்டினத்தில் மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தவர். இளம் வயதிலேயே அஷ்டமாசித்திகள் கைவர பெற்றவர். சில சித்தர்கள் தங்கள் உடலை கிடத்திவிட்டு, ஆன்மாவை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். ஆங்காங்கு கிடைக்கும் உடல்களில் புகுந்து கொண்டு சேவை செய்வார்கள்.
ராமதேவர் மிகவும் வித்தியாசமானவர். முயற்சி… முயற்சி… முயற்சி… இதுவே அவரது தாரக மந்திரம். இந்த மந்திரத்திற்கு மாபெரும் பலன் கிடைத்தது. ராமதேவர் தன் உடலுடனேயே பிற தேசங்களை விரைவில் அடையும் சித்தியை பெற்றார். ஒருமுறை இவர் கங்கைக்கு நீராடச் சென்ற போது, சட்டைநாதரின் விக்ரகம் அவருக்கு கிடைத்தது.
அதை நாகப்பட்டினம் கொண்டு வந்து ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தார். சில சித்தர்களின் தரிசனமும் இமயமலைக் காடுகளில் அவருக்கு கிடைத்தது.அவர்கள் ராமதேவரிடம், சித்தனே! நீ மெக்கா செல். அங்கே ஏராளமான காயகல்ப மூலிகைகள் இருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து, மருந்து தயாரித்து மக்களின் பிணி தீர்க்கும் உன்னதமான பணியைச் செய், என்று வற்புறுத்தினர்.
அவர்களது கட்டளையை ஏற்ற ராமதேவர் தன் சித்தியால் மெக்கா சென்றடைந்தார். புதியவர் ஒருவர் தங்கள் நாட்டுக்கு வந்ததும், அரபு நாட்டு மக்கள் அவரை ஏற்க மறுத்தனர். அரபு நாட்டவரைத் தவிர மற்றவர்கள் அங்கு தங்க அனுமதி கிடைக்காது.