மச்சமுனி

ஒரு சமயம் கோடியக்கரையில் ஆலவாய் சித்தரான சிவபெருமான் உமையம்மைக்கு காலஞானம் பற்றி போதித்தார். அப்போது கடலில் நீந்திக் கொண்டிருந்த கருவுற்ற மீனின் கருவும் அந்தக் காலஞானத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை கேட்டது. மேலும் பல ஞானத்தை அறிய அக்கரு மனிதக் குழந்தையாக பூமியில் பிறந்தது. அந்த மனிதக் குழந்தைக்கு சிவபெருமான் மச்சநாதர் என்றப் பெயரிட்டார். மேலும் நான் உமையம்மைக்கு உபதேசித்த காலஞான தத்துவத்தை கருவிலேயே முழுமையாக கேட்டறிந்த “நீ கருவிலேயே திருவுற்றவன்” என்றுரைத்தார். மேலும் பல ஞானங்களை விரைவாக கற்றுணர்ந்து மச்சநாத சித்தனாக உலகம் முழுவதும் பயன்புறும் வகையில் பல செயல்களைப் புரிந்து பல்லாண்டு ஆண்டு காலம் இப்பூமியிலே நீ வலம் வருவாயாக என வாழ்த்தி, குமரன் கோவில் கொண்டுள்ள குன்றம் ஒன்றில் நீ சித்தி அடைவாயாக எனவும் அருளாசி வழங்கினார்.

மச்சநாதரின் தவவலிமையைப் பற்றிய புராணம்

ஒரு சமயம் மச்சநாதர் இராமேஸ்வரத்தில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதை ஸ்ரீஅனுமன் கண்டார். தன்னை கவனிக்காது தொடர்ந்து தவம் செய்து கொண்டிருக்கும் மச்சநாதரின் தவத்தை கலைத்து அவர் கவனத்தைத் தன்னிடம் திருப்ப வேண்டும் என எண்ணிய ஸ்ரீஅனுமன் கர ஓசை எழுப்பினார், அவர் தொடந்து தவத்தில் இருப்பதை கண்ட ஸ்ரீஅனுமான், பெருமழையை பொழியச் செய்தார். அப்போதும் அவர் தவத்திலிருந்து கலையாதைக் கண்ட ஸ்ரீஅனுமன் மலைகளை இடித்து குகை ஒன்றை உருவாக்க முயன்றார். தவம் கலைந்து கண்விழித்து மச்சநாதர் ஸ்ரீஅனுமனை நோக்கி ஏன் இந்தத் தவறான காரியத்தைச் செய்கிறாய் எனக் கேட்டார். மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பான இடைத்திற்கு செல்லவேண்டுமே தவிர உமது சக்தியால் இதுபோன்ற காரியத்தைச் செய்வது தவறு. “தாகம் ஏற்படும் போது மட்டும் யாரும் கிணறு ஒன்றை தோண்டுவதில்லை” என்பதை உதாரணமாக எடுத்துரைத்தார்.

அதனை கேட்ட ஸ்ரீஅனுமன் நான் வாயுபுத்திரன் அதிக சக்தி உடையவன், ஸ்ரீஇராமபிரானிடம் அருளாசிப் பெற்றவன். நீ யார்? உன்னிடம் என்ன சக்தியிருக்கிறது எனக் கேட்டார். அதற்கு தாம் மந்திரங்களை அறிந்த ஒரு சித்தன் என்றார் மச்சநாதர்.

அவரது மந்திர சக்தியை சோதிக்க எண்ணிய ஸ்ரீஅனுமன் மூன்று மலைகளை தோண்டி எடுத்து தூக்கி வந்தார். மச்சநாதர் தம் மந்திர சக்தியால் அம்மூன்று மலைகளையும் மீட்டு அவை இருந்த இடத்திலே வைத்தார். அவரின் மந்திர சக்தியை கண்ட ஸ்ரீஅனுமன் அம்மூன்று மலைகளை விட பெரியமலை ஒன்றை தூக்கி வந்தார். மச்சநாதர் தம் மந்திர சக்தியால் அந்த பெரியமலையையும் மழைநீரால் கரையைச் செய்தார். மச்சநாதரிடம் தோல்வி அடைந்த ஸ்ரீஅனுமன் தனது சக்திகள் அனைத்தையும் இழந்தார்.