
குதம்பை சித்தர்
1.ஆமைபோல் ஐந்து மடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி -குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி.
2.மந்தி மனதை வசப் படுதிட்டார்க்கு
வந்தெய்து முத்தியடி -குதம்பாய்
வந்தெய்து முத்தியடி.
3.செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்கா தழியுமடி -குதம்பாய்
தங்கா தழியுமடி.
4.கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
கூடவே வராதடி -குதம்பாய்
கூடவே வராதடி.
5.விந்து விடார்களே வெடிய சுடலையில்
வெந்து விடார்களடி -குதம்பாய்
வெந்து விடார்களடி.
விளக்கம்:
முத்திநிலை பெறும்வழி:
1. ஆமை போல் ஐம்புலன்களையும் அடக்கி, கண்ணை நாசி(மூக்கு) நுனியில் வைத்து,
குண்டலியை எழுப்பி ஊமை போல் இருப்பவருக்கு முத்தி உறுதி.
2. குரங்கு போல் அலையும் மனதை, சுவை,ஊரு,ஒளி,ஓசை,நாற்றம் ஆகியவற்றிலிருந்து விளக்கி கட்டுப்படுத்துபவருக்கு முத்தி வந்தெய்தும்.
பொருள் நிலையாமை: 3. செங்கோல் ஆட்சி செலுத்தி பெற்ற செல்வமும், காலப்போக்கில் அழிந்துவிடும், நிலையில்லா தன்மை கொண்டது.
4. பெற்றோர், மக்கள் என்ற பந்தகள் மற்றும் மனை மாடு ஆகிய பொருள்களும் எங்கும் நம்முடன் வாராது.
தேகத்தின் கற்ப நிலை: 5. விந்தை விடாமல் சரியான முறையில் அடக்கி, குண்டலியை எழுப்பி மெய்ஞானத்தை அடைந்தவருக்கு மரணம் என்பது இல்லை அதாவது சுடலை(சுடுகாடு) அடையமாட்டார்.