வான்மீகர்

வால்மீகி (அல்லது )வான்மீகி  ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். இருண்ட காடு. யாரும் தனிவழியே போவதற்கு பயம் கொள்வர். இரண்டு பெரிய நகரங்களுக்கு நடுவில் இந்த காடு இருந்ததால் பலருக்கு இதன் வழியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரும் கூட்டம் கூட்டமாக பாதுகாப்புடன் தான் இதன் வழியே செல்வர். வணிகர் கூட்டம் அடிக்கடி இந்த வழியே செல்வதால் வழிப்பறி செய்யும் ஒரு கூட்டம் இந்த காட்டில் கூடாரம் இட்டு வாழ ஆரம்பித்து விட்டது. எத்தனைப் பாதுகாப்புடன் வந்தால் தான் என்ன, இந்த கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டால் அவ்வளவுதான். இருப்பதை அனைத்தயும் குடுத்துவிட்டுதான் செல்ல வேண்டும்.  அந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் ஒருவன் இருந்தான்.

பெரிய குடும்பி. அவன் கொள்ளையடிப்பதில் மிக சாமர்த்தியமிக்கவன்  என்பதால் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர்.  சில நேரம் அவன் தனியாகக் கூட வழிப்பறி செய்ய கிளம்பிவிடுவான். என்ன செய்ய? பெரிய குடும்பம்…காப்பாற்ற வேண்டாமா? மனைவியர்களும் குழந்தைகளும் உறவுகளும் அவன் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளனர்? அவனுக்காக தன் உயிரையும் கொடுக்க முன்வருவார்களே? அவர்களைக் காப்பது தன் கடமையல்லவா? என்று அடிக்கடி எண்ணிக்கொள்வான் அந்த தலைவன்.

ஒரு தடவை அப்படி அவன் தனியே கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் மாட்டிக்கொண்டார் ஒரு முனிவர். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டும் ‘நாராயண, நாராயண’ என்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். (அவர் வேறு யாருமல்ல நாரதர் தான் ) இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் அவர் நடுநடுங்கி இவனைப் பார்த்து ‘யாரப்பா நீ. உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும்’ என்றான்.

முனிவருக்கு அவன் கொள்ளைக்காரன் என்பது அப்போதுதான் புரிந்தது. ‘அப்பா. நீ செய்வது மகா பாவம் அல்லவா? இப்படி வருபவர் செல்பவர்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தால் யமன் உன் உயிரைக் கொள்ளையடித்துச் செல்ல வரும் போது உனக்கு நரகம் தானே கிடைக்கும். இது பாவம்’ என்று பலவாறாக அறிவுரை சொன்னார் அந்த முனிவர். கேட்பானா இவன்.