
பாம்பாட்டி சித்தர்
காடுமலை நதிபதி காசி முதலாய்க்
கால்கடுக்க ஓடிப்பலன் காணலாகுமோ
வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே
வேதாந்தத் துறையினின் றாடாய் பாம்பே !
வாயுவினை இரையாக வாங்கி உண்டே
வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே
தேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில்
திகைப்பறச் சேர்ந்துநின் றாடாய் பாம்பே !
விளக்கம்:
காடு, மலை, புண்ணிய நீராடுதல், கோயில் என்று கால்கடுக்க அலைந்தாலும், முத்திநிலை அடையமுடியாது. வாசியோகத்தால் வாயுவினை இடக்கலை, பிங்கலை என்ற வழியில் ஏற்றி இறக்கி, மூலத்தில் மனதை வைத்து சுழிமுனை திறந்தால், சிரசில் அமுது சுரக்கும் பின்னர் பரப்பிம்மத்தை அடையலாம் என்கிறார் பாம்பாட்டி சித்தர்.
பிறந்தது கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில். 123 வருடம் 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சங்கரன்கோவிலில் சமாதியடைந்துள்ளார்பாம்பாட்டி ஒருவர் பாம்புகள் பிடிப்பதில் வல்லவர். எத்தகைய கொடிய விஷமுள்ள பாம்பும் இவர் கண் பார்வைக்கும், கைப்பிடிக்கும் தப்பித்துச் செல்ல முடியாது. பக்கத்திலுள்ள காடு ஒன்றில் நவரத்தினப் பாம்பொன்று இருப்பதாகக் கேள்விப்பட்டு அக்காட்டினுள் சென்றார்.
இரவு நேரம். இருட்டில் பாதை தெரியாமல் தட்டுத்தடுமாறிக்கொண்டு காட்டினுள் நடந்து கொண்டிருந்த பாம்பாட்டியின் எதிரே பிரகாசமான ஒளியுடைய பாம்பொன்று மெல்ல ஊர்ந்து கொண்டு சென்றது.
அதன் அழகில், அதன் ஒளியில் ஆட்பட்டு அதனைப் பிடிக்கவும் செய்யாமல் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தார். தேடிப்போன புதையலைக் கண்ணெதிரே கண்டுங்கூடக் கைப்பற்ற
முடியாதவராகி ஏதோ சிந்தைனையில் அப்படியே ஆடாமல்அசையாமல் நின்றார். கொஞ்ச நேரத்தில் அந்தப் பாம்பு தவயோகி ஒருவராக வடிவமெடுத்து நின்றது. அவர்தான் சட்டைமுனி சித்தர். இந்த சட்டைமுனி சித்தர் அந்தப் பாம்பாட்டிக்கு நல்லறிவு புகட்டினார்.
உலக நிலையாமையைக் கூறினார். பின்னர் அவருக்குத் தீட்சையளித்து மறைந்தார்.
நடந்தது கனவா! நினைவா! என்று திகைத்து நின்ற பாம்பாட்டி மெய்ஞானம் கைவரப்பெற்று நாட்டினுள் சென்றார். அக்காலத்தில் அந்நாட்டு அரசன் மரணமடைந்து விடவே அனைவரும் பெருந்துக்கத்தில் இருந்தனர். அவர்களின் துக்கம் தீர்க்கவும், தாம் பெற்ற தவ சக்தியைப் பரிட்சித்துப் பார்க்கவும் இறந்த அரசனின் உடலில் புகுந்து அதிசயம் நிகழ்த்தினார். எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிழைத்து எழுந்த மன்னர் அருகில் இருந்த செத்த பாம்பொன்றைக்கண்டார்.