
கோரக்கர்
கோரக்கர் சித்தரின் பிறப்பு சித்த புருஷர்களின் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டது. விபூதி எனில் சாம்பல் என்று ஒரு பொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியிலிருந்து பிறந்தவர் இவர், என்பார்கள். ஆணும் பெண்ணும் கூடி அந்தக்கருவால் வளரும் உயிர்கள் கருமஞ்சார்ந்தவை.ஆனால் அவ்வாறு இல்லாமல், விதிவிலக்காக பல மனித உயிர்களும் தோன்றியுள்ளன. அப்படி விசேஷமாகப் பிறந்தவர்களுள் ஒருவர் தான் கோரக்கர்.
கோரக்கரின் ஜீவசமாதி இடங்கள்
பொதிய மலை, ஆனை மலை, கோரக் நாத்திடல் (பாண்டிய நாடு), வடக்கு பொய்கை நல்லூர், பரூரப்பட்டி (தென் ஆற்காடு), கோரக்கர் குண்டா (சதுரகிரி), பத்மாசுரன் மலை (கர்நாடகம்), கோரக்பூர் (வட நாடு)இவற்றில் வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். பொதிய மலை ஆனைமலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக்நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் என்ற இடத்திலுள்ளது.
அங்குள்ள கோரக்கர் சமாதிக்கு சித்ரா பௌர்ணமியன்று பொங்கலிட்டு படையல் செய்து வழிபட்டு வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோரக்நாத் மந்திர் என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது. ஐப்பசி பௌர்ணமி நாளில் சமாதி கூடிய இவர் அன்றைய தினம் வழிபடுபவர்க்கு (வடக்கு பொய்கை நல்லூரில்) இன்றும் வரம்பல அருள்கிறார் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. கோரக்கரின் தொடர்புடைய பிற மடங்களாகப் பேரூர், திருச்செந்தூர் மற்றும் இலங்கையில் உள்ள திருக்கோணமலை உள்ளது. கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லி மலைகளில் காணப்படுகின்றன. மற்ற சித்தர்களைப் போலவே, கோரக்கர் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களையும் எழுதியுள்ளார்.