
போகர்
பதினெண் சித்தர்களுள் சிறப்பு வாய்ந்தவர் போகர் சித்தர் ஆவார். இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதர் என்பவரின் சீடராவார். புகழ் பெற்ற புலிப்பாணி என்னும் சித்தருக்கு இவர் குருவாக விளங்கியவர். போகர் இயற்றிய நூல்களில் இருந்து அவரது காலம் கி.மு. 500 மற்றும் கி.மு. 100 க்கு இடைப்பட்ட காலம் என அறிய முடிகிறது. பிற வரலாற்றுப் பதிவுகளும் அவ்வாறே கூறுகின்றன. இவர் சித்த மருத்துவத்திலும், யோகக் கலைகளிலும், இரசவாதம் செய்வதிலும், தத்துவ விஷயங்களிலும், சிறந்து விளங்கியவர். அது மட்டுமின்றி இவர் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார் என்பது இவரின் சிறப்பு. காயகற்பம் மற்றும் யோகாசனத்தில் இவர் சிறந்து விளங்கியவர். இவர் தமிழிலும் சீன மொழியிலும் பல நூல்களை எழுதியுள்ளார்.
நவநாயகராக போகர்
அண்டை நாடான சீன தேசமும், நமது பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே, ‘போ யாங்’ என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.
சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் அறுசுவை உண்டு. சாத்வீகமான உணவு வகைகள் உண்டு இந்திய உணவு சமச்சீர் உணவு ஆகும். சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் ‘ரஜோலி’ என்னும் யோக முறையும் ஒன்று. போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.