
இடைக்காடர்
இடைக்காடர் சித்தர் என்பவர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காட்டுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு – முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் – இடையர் – கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்திப் பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.
இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும், சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம் பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார் என ஜனன சாகரம் 500 நூலில் போகர் கூறுகிறார்.
இடைக்காடர் சித்தர் பாடல்கள்
இடைக்காடனார் என்னும் பெயருடன் சங்க காலத்தில் ஒரு புலவர் வேறு. திருவள்ளுவ மாலை பாடல்களில் ஒன்றைப் பாடிய இடைக்காடனார் என்பவரும் வேறு. இங்கு கூறப்படும் இடைக்காடனார் ஒரு சித்தர்.
இடைக்காடு என்பது இவர் வாழ்ந்த ஊர். இந்த ஊர் கேரள மாநிலத்திலுள்ள இடைக்காடு என்றும், மதுரைக்குக் கிழக்கில் உள்ள இடைக்காடு என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஆடு, மாடு, அன்னம், மயில், குயில், புல்லாங்குழல், அறிவு, நெஞ்சம், முதலானவற்றை முன்னிறுத்திப் பாடுவதாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன.